Saturday, July 25, 2009

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்






படங்களில் நீங்கள் காண்பது தம்பலகாமத்தின் எல்லைப்பிரதேசம். திடல்களாகக் காணப்பட்ட ஊர்மனைகள் முடிவடைந்து, ஒருசில தனித்த வீடுகளுடன், பசுமைநிறைந்த வயல்வெளிகளும் மறைந்துபோக சதுப்பு நிலவெளிகளாகக் காணப்படுகிறது எங்கள் ஊரெல்லை.



நன்றாக ஞாபகம் இருக்கிறது 1990ம் ஆண்டு வைகாசிப் பொங்கலுக்கு அடுத்த நாள் நள்ளிரவு முதன்முதலாக இந்த எல்லையைத் தாண்டி அகதிகளானோம்.


1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதிய ஐயனார் கோயில்த் தீவிற்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சிலநாட்களின் பின் மீளத்திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம்.


ஆனால் இது அவ்வாறிருக்கவில்லை. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணைவீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப் பட்டது.


அப்போது எனக்கு 12 வயது. இருந்தும் பயம்எதுவும் இருக்கவில்லை. மூட்டைமுடிச்சுக்களுடன் அடிக்கடி ஓடுவது பழக்கமாகிப்போயிருந்தது.


நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை 4 மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.


அதிகளவில் சிறுவர்களைக் கொண்டிருந்த குடும்பங்களே முதலில் இடம் பெயர்ந்தன. அதனால் ஊரில் நிறையப்பேர் எஞ்சியிருந்தார்கள். அன்றைய ஊரின் நாட்குறிப்பு உதிரத்தால் எழுதப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டோம்.


படமெடுப்பதற்காக தரித்துநின்ற சில நிமிடங்களில் அனைத்து ஞாபகங்களும் அலையலையாய் வந்துபோனது.


சூரங்கல் பிரதேசத்தில் நாங்களாகவே களிமண்ணில் கல்லறுத்து, தென்னோலை வேய்ந்த குடிசை அமைத்திருந்தோம். மழைநிறைந்த ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈரமூறிய பாயில் காய்ச்சலில் கிடக்க, குடிசைக்குள் மழைவெள்ளம் வராமல் விடியவிடிய மண்ணணை கட்டிய காட்சிகள் மனதில் படமாக வந்து போகிறது. ம்.. ம் ..இன்னும் இப்படி நிறைய...


நீண்ட நேரம் புகைப்படக்கருவியுடன் அந்த இடத்தில் நிற்பதை உணர்ந்து திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து சுதாகரித்துக் கொண்டு வீடுதிரும்பினேன்.


என் அன்றைய பொழுதினை நிறைத்திருந்தது பழைய ஞாபகங்கள்..







Bookmark and Share

2 comments:

ஹேமா said...

ஜீவா,மனம் பாதிக்கும் தருணங்கள்.வலியின் உச்சத்தில் வெறுப்பும் வேதனையும்தானே வருகிறது.எப்படி ஒத்து வாழ்வது...?

படங்கள் அருமையாய் இருக்கிறது ஜீவா.

Shan Nalliah / GANDHIYIST said...

Thanks for sharing! I pray GOD of KATHIRGAMAM to nsave all good humanbeings!

Post a Comment