Wednesday, December 16, 2009

வீடு - ஞாபகச்சிதறல்


புலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.



இடம்பெயர்ந்து பதினேழு வருடங்களுக்குப்பின் திருத்தப்பட்ட எமது வீட்டின் முன்றலில், இரவில் நிலவொளியில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டோம். இனப்பிரச்சனை , எதிர்காலம் , சமகாலப்பிரச்சனைகள் , இலக்கியச் சொல்லாடல்கள் என்றெல்லாம் தீர்ந்துபோய் தனியே வீட்டில் வந்து நின்றது.


வீடு...வீடு ..வீட்டைப்பற்றியே பேச்சாக இருந்தது. சிறுவயதில் அதுவொரு பெரிய உலகமாக இருந்தது. நாங்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவரவில்லை. திடீரெனப்பிரிக்கப்பட்டோம். ஒருவேளை அதன்மீதுகொண்ட அதீத அன்புக்கு அதுதான் காரணமோ தெரியவில்லை.



நடுநிசி கடந்த அந்த இரவு இன்றும் நெஞ்சில் இருக்கிறது. பிறந்துவளர்ந்த அந்த வீட்டை விட்டு ஊர்விட்டோடிய அவலத்தின் ஒவ்வொரு கணமும் நினைவிருக்கிறது. நான் பன்னிரு வயதில் பாவித்த சிறியரக துவிச்சக்கர வண்டியின் கைபிடிகள் இரண்டிலும் பசளைப் பையில் சமையலுக்குரிய முக்கிய பொருட்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னிருக்கையை வானொலிப்பெட்டி நிறைத்திருந்தது. வண்டியை உருட்டி நடக்கையில் பாரத்தின் பழு தெரியாமல் பார்த்துக்கொண்டது உயிர் வாழ்தல் பற்றிய பயம்.



குழந்தைகள் ,முதியவர் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் குளிர் நிறைந்த அந்த இரவில் கைக்குக் கிடைத்த துணிகளால் எங்களை மூடிக்கொண்டு தெருவில் நடந்துகொண்டிருந்தோம். துப்பாக்கி வேட்டுக்களாலும் , எறிகணை வீச்சுக்களாலும் நிறைந்திருந்தது வானம். அழுகுரல்களுக்கும் , ஓலங்களுக்குமிடையில் தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது ' எப்படியாவது தப்பிப் போயிடணும்' என்ற என் ஆழ்மன ஏக்கம்.



அதிகாலை நேரம் பயணத்தின் பாதைகளைக் களைப்பும் , தேங்கியிருந்த நித்திரையும் மூடியது. சாதாரணமாக மரத்துக்குக்கீழ்நின்று விளையாடினால் பேசும் அம்மாவும் அப்பாவும் ஒரு மரத்தின் கீழ் துணிவிரித்து எங்களை நடுவில் விட்டு இருகரையிலும் படுத்துக் கொண்டது ஆச்சரியம் தந்தது. நேரம் செல்லச்செல்ல அங்கிருந்த மரங்களுக்குக் கீழுள்ள இடங்களுக்கான போட்டியும் கூடிச் சென்றது. துணிபோர்த்து நடுங்கிக்கொண்டே வந்த ஒவ்வொரு உருவங்களும் இடம் பிடித்துப் படுத்துக்கொண்டன.



காலைநேரம் திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது எனக்குமுன்னமே விழித்துக் கொண்டவர்கள் அவசரத்தில் விட்டுவந்த உறவுகள் ,உடமைகள் தொடர்பில் அழுது கொண்டிருந்தார்கள். திரும்பிக் காலடியில் சுருண்டு படுத்திருந்த எங்கள் வீட்டுநாயினைப் பார்த்தபோது மனத்துக்குள் பெரும் குற்றவுணர்வு தோன்றியது .அவசர அவசரமாக ஓடிவரும் போது எங்களால் தனித்துவிடப்பட்ட நாய் இப்போது தானாகவந்து சேர்ந்திருந்தது.



விட்டுவந்தது மட்டுமல்ல அந்த நிமிடம்வரை அது பற்றி எந்த உணர்வுமில்லாமல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் பெரும் அவமானமாக இருந்தது. உயிர் பிரிதல் பற்றிய பயம் உறவுகள்மீது கொண்ட பற்றுக்களில் எவ்வளவு பிளவுகளை உருவாக்கிவிடுகிறது என்பது அப்போது புரிந்தது.


இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் உயிர்காத்தலுக்கான ஓட்டம். இதில் எத்தனையோ இழப்புக்கள் ,வலிகள் ,வேதனைகள் . இவைஅனைத்தையும் தாண்டி எந்தவூர் சென்றாலும் தட்டிவிட முடியாதபடி ஒட்டி இருந்து வருகிறது வீட்டைப் பற்றிய நினைவுகள்.


வேலைவாய்ப்புக்காக ,வசதிக்காக ,உயர்கல்விக்காக என்று எத்தனையோ காரணங்களுக்காக உலகில் மனிதர்கள் தங்கள் சொந்தவீட்டைவிட்டு பிரிந்து செல்கிறார்கள். ஆனால் வன்முறை காரணமாக தம் சொந்த வீட்டை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டவர்களின் துயரம் தனியானதாக ,தணியாததாக இருக்கிறது.


மருத்துவபீட விடுமுறையின் போது யாழில் உள்ள பத்திரிகையொன்றில் வெளிவந்த என் கவிதையை ( சிறைவைக்கப்பட்ட வீடு ) நான் திரும்பியவுடன் பத்திரமாக எனக்குத் தந்த நண்பன் கலங்கிய கண்களுடன் தனது சிறுபிராயத்தில் சொந்த ஊரான காங்கேசன்துறையில் இருந்து பிரிக்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்தபோது தொண்டைக்குழி வரண்டு வார்த்தைகள்வர சிரமப்பட்டது இருவருக்கும். இன்றுவரை உயர்பாதுகாப்பு வலயத்துள் சிறையிருக்கிறது அவர்வீடு.



நாங்கள் படிக்கும்போது ஒருவீட்டில் மதிய உணவுக்கு ஒழுங்கு செய்திருந்தோம். உணவுதயாரிப்பவரின் கணவர் மிதிவெடி மூலம் காலையிழந்தவர். அவர் தனது சொந்தவீட்டைப் பார்க்கப்போனபோதுதான் இந்த அனர்த்தத்துக்குள்ளாக வேண்டியிருந்தது என அறிந்திருந்தேன். தற்செயலாக அவரும்,நானும் அவரது சொந்த வளவில் சந்திக்கநேர்ந்தபோதுதான் பார்த்தேன். அங்கு வீடு என்றொன்றே இல்லை. சில சுவர்களும் எஞ்சியிருக்கும் கதவின் சில நிலைகளும் அங்கு வீடொன்று இருந்ததை ஆதாரப்படுத்தி இருந்தது.



அண்மையில் இடம்பெயர்ந்து பின் சொந்தவூர் திரும்பிய உறவொன்று தன் சொந்த வீட்டைப்போய்ப்பார்த்துவிட்டு வந்தபின் ஒடுங்கிப்போய் சுவரோடு ஒட்டியிருந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. இப்படி நீண்டுகொண்டு போகிறது வீட்டை பிரிதவர்கள் பற்றிய நினைவலைகள்.


தெருவில் பயணிக்கும்போது கண்ணில் படும் வன்முறை நிமிர்த்தம் உடைந்த எந்த வீடும் , அதிலிருந்தவர்களின் வேதனைகளை ஞாபகப்படுத்தும் அதேவேளை , விரைவில் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீள்திரும்ப வேண்டும்மென மனம் ஏங்குவதைத் தவிர்க்கமுடியவில்லை.


Share/Save/Bookmark




1 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete