Sunday, November 22, 2009

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை

(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)


(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.


திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.



வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



Share/Save/Bookmark


Saturday, July 25, 2009

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்






படங்களில் நீங்கள் காண்பது தம்பலகாமத்தின் எல்லைப்பிரதேசம். திடல்களாகக் காணப்பட்ட ஊர்மனைகள் முடிவடைந்து, ஒருசில தனித்த வீடுகளுடன், பசுமைநிறைந்த வயல்வெளிகளும் மறைந்துபோக சதுப்பு நிலவெளிகளாகக் காணப்படுகிறது எங்கள் ஊரெல்லை.



நன்றாக ஞாபகம் இருக்கிறது 1990ம் ஆண்டு வைகாசிப் பொங்கலுக்கு அடுத்த நாள் நள்ளிரவு முதன்முதலாக இந்த எல்லையைத் தாண்டி அகதிகளானோம்.


1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதிய ஐயனார் கோயில்த் தீவிற்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சிலநாட்களின் பின் மீளத்திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம்.


ஆனால் இது அவ்வாறிருக்கவில்லை. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணைவீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப் பட்டது.


அப்போது எனக்கு 12 வயது. இருந்தும் பயம்எதுவும் இருக்கவில்லை. மூட்டைமுடிச்சுக்களுடன் அடிக்கடி ஓடுவது பழக்கமாகிப்போயிருந்தது.


நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை 4 மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.


அதிகளவில் சிறுவர்களைக் கொண்டிருந்த குடும்பங்களே முதலில் இடம் பெயர்ந்தன. அதனால் ஊரில் நிறையப்பேர் எஞ்சியிருந்தார்கள். அன்றைய ஊரின் நாட்குறிப்பு உதிரத்தால் எழுதப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டோம்.


படமெடுப்பதற்காக தரித்துநின்ற சில நிமிடங்களில் அனைத்து ஞாபகங்களும் அலையலையாய் வந்துபோனது.


சூரங்கல் பிரதேசத்தில் நாங்களாகவே களிமண்ணில் கல்லறுத்து, தென்னோலை வேய்ந்த குடிசை அமைத்திருந்தோம். மழைநிறைந்த ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈரமூறிய பாயில் காய்ச்சலில் கிடக்க, குடிசைக்குள் மழைவெள்ளம் வராமல் விடியவிடிய மண்ணணை கட்டிய காட்சிகள் மனதில் படமாக வந்து போகிறது. ம்.. ம் ..இன்னும் இப்படி நிறைய...


நீண்ட நேரம் புகைப்படக்கருவியுடன் அந்த இடத்தில் நிற்பதை உணர்ந்து திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து சுதாகரித்துக் கொண்டு வீடுதிரும்பினேன்.


என் அன்றைய பொழுதினை நிறைத்திருந்தது பழைய ஞாபகங்கள்..







Bookmark and Share

Wednesday, June 3, 2009

தனித்து விடப்பட்டவர்கள்....

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.


தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.


மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.


அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.


சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.


பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.


அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.


பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.

தனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

உதவும் கரங்களுக்கான தேவை நிறைந்த உலகமிது



Bookmark and Share



Tuesday, May 26, 2009

ஊனமது கொடுமை.....


இருக்கிறது பலவழிகள்
இழந்தவற்றை மீளமைக்க
என்றாறுதல் கொண்டாலும்
ஊனமது கொடுமை
உயிர் வாழும் வரையில்
நம்நாட்டு நிலையில்



உடனிருந்த அங்கம்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனால்
உடல் வலியது மாறும்
உயிர்வலியதுதானே அவன்
மாளும்வரை தொடரும்



பகிர்கையில் குறையும்
அந்தத் துன்பம்
கைகொடுத் உதவுகையில்
நிறையும் நம் நெஞ்சம்
காலத்தின் தேவையிது
நம்கண்முன்னே நிற்கிறது..


Bookmark and Share